திங்கள் ,மார்ச்,2, 2015

தலையங்கங்கள்

பழந்தமிழகம் - நா. மகாலிங்கம்

கட்டுரைகள்

தமிழ்த் தொண்டாற்றிய எல்லீசர் - ப. சோமசுந்தர வேலாயுதம் | வள்ளலார் இல்லம் பொதுமையாகட்டும்! - பழ. நெடுமாறன் தலைவர், உலகத்தமிழர் பேரமைப்பு | அமெரிக்காவில் இப்படி ஒரு தமிழ்ப் பெண் - - சிபி. | திருச்சியில் செண்பகத்தமிழ் அரங்கு - முனைவர் ப. சுப்பிரமணியன் | கம்பன் கழகங்களின் – தோற்றமும் வளர்ச்சியும் – 8 - நா. நஞ்சுண்டன், | கிரேக்கக் கலை மரபு – 8 - ஸ்டாலின் | அர்த்தமுடன் அறுபது கொண்டாடுக! - முனைவர் ந.இரா. சென்னியப்பன் | ஆச்சரியம்! ஆனால் உண்மை -  | ஐந்தும் ஐயாறனும்! - தமிழ்க்கீரன் | அரவிந்தரின் ஆன்மிகம்! - மு. பழனி இராகுலதாசன்

விவாதங்கள்

காதலர் தினம்! - - பி.சி.

நேர்காணல்

மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்காக… -

ஆன்மிகங்கள்

காண்போரைக் கவரும் காளையார் கோவில் - என்.ஆர். ஜெயசந்திரன்

ராசி பலன்கள்

இம்மாத ராசிபலன் - ஜோதிடத் திலகம் க. தில்லையம்பலம்

சிறுகதைகள்

ஆத்தா - அய்க்கண் | தொட்டில் குழந்தை - கலைமாமணி விக்கிரமன்

கவிதைக்கள்

சத்தியம் - தங்கமகன் | எடைபோட முடியாத பாடல்கள் - சென்னிமலை தண்டபாணி

விவாதக் கடிதங்கள்

பிப்பரவரி 2015 இதழ் விவாதம் ஜல்லிக்கட்டை ஒழிக்கலாமா…? -

பிறச் செய்திகள்

ஒட்டன்சத்திரம் வட்டார சன்மார்க்கிகளின் புகழஞ்சலி! -  | அருட்செல்வருக்குப் புகழஞ்சலி! -  | பொள்ளாச்சியில் ஒரு விமரிசையான விழா! -  | மிக்சட் ப்ளவர் மில்க் ஷேக் - ர.கிருஷ்ணவேணி, சென்னை.

புத்தக மதிப்பீடுகள்

புத்தக மதிப்பீடு -  | இதிகாசங்களில் போர்க்களங்கள் - - ஆர்.வி.

குன்றாக் கொள்கைக் கோவலன்

பேரா.இராம. இராமநாதன்

80 ஆண்டு நினைவுக் கட்டுரை

ஆயிரம்பிறை காணும் காரைக்குடி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் இராம. இராமநாதன் ஐயா அவர்களின் 80 ஆண்டு சதாபிஷேக முத்துவிழா நினைவாக அவருடைய குன்றாக் கொள்கைக் கோவலன் என்ற அரிய கட்டுரையை ஓம் சக்தி வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறது.

பேராசிரியர் இராமநாதன் சிலப்பதிகாரத்திற்குள் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். இளங்கோவடிகளோடு தினசரி உரையாடி வருபவர். மாதவியின் மாண்பைப் போற்றியும் கண்ணகியைத் தெய்வமாகவே கைகுவித்து வணங்கியும் வாழ்ந்து வரும் பேராசிரியர்.

நிச்சயமாக அவருடைய முத்துவிழாவில் மாதவியின் பாதச் சலங்கை மட்டுமல்ல, கண்ணகியின் காற்சிலம்பின் ஒலியும் கேட்கத்தான் செய்யும். முத்துவிழாக் காணும் முத்தமிழறிஞர் நூற்றாண்டு காண இறையருளைப் பிரார்த்திக்கின்றோம்.

& பொ.ஆர். தொல்காப்பியத்தில் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தமிழ்ச் சொற்களுக்கு ஒரு விதியினைத் தொல்காப்பியர் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்தில் வரும் குன்றாக் கொள்கைக் கோவலன் என்ற சொற்களும் சிறந்த பொருண்மை தாங்கியே திகழ்கிறது. எதுகை மோனைக்காக அடிகள் இச்சொற்களை ஆளவில்லை.

தன்னுடைய வாழ்க்கையை முடிவுசெய்யும் பொறுப்புத் தம் பெற்றோருக்கு உரியது என்ற அக்கால மரபுக்பேற்ப, தம் பெற்றோர் விருப்பப்படி கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நடந்ததாகவே அடிகள் கூறுவார்.

மணமக்கள் தாம் ஒருவரை ஒருவர் அறியாராய் ஊர் மெச்சத் திருமணம் நடந்ததாகவே அடிகள் கூறுவார். இருவரில் ஒருவர் அறிந்திருப்பின் இத்திருமணம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பதைக் காப்பிய நிகழ்ச்சிகளின்வழி நம்மால் அறிய முடிகிறது. திருமணத்திற்கு முன்னர் தலை மக்கள் தம்முள் கண்டு பேசியதாகச் சங்க இலக்கியங்கள் கூறும்போது, சிலப்பதிகாரத் தலை மக்கள் மட்டும் இவ்வாறு ஒருவரை ஒருவர் அறியாத நிலையில் மணம் கொண்டமை வியப்பாக உள்ளது.

கோவலன் தன்னுடைய குடிப்பிறப்பைக் காப்பதில் மிகுதியும் அக்கறை உள்ளவனாகவே காப்பியத்தில் முழுமையும் கவனத்துடன் செயல்படுகின்றான். தந்தை காவிரிப்பூம்பட்டினத்தில் பெயர்மிக்க வணிகர். மாசாத்துவன்குடி என்பது வணிக உலகில் அறியாத மக்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு வறியோர்க்கு வாரி வழங்கும் வள்ளன்மை உடையவனாக இரண்டு வரிகளில் மட்டும் மங்கல வாழ்த்துப் பாடலில் சுட்டப் பெறுகிறது.

கோவலனோ தன் தந்தையின் பெயரையோ, குடும்பச் சிறப்பையோ எந்தச் சூழ்நிலையிலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. காரணம் அன்றையச் சமுதாயத்தில் குடும்பப் பெயர்களுக்கு இருந்த மதிப்பேயாகும். கண்ணகியும் சிறந்த வணிகக் குடும்பத்தில் பிறந்தவள் என்பதும் அவள் தந்தை மாநாய்கனுக்கு ஒரே மகள் என்பதும் கடல் வணிகத்தில் மேம்பட்ட பெயரினை உடையவன் என்றும் தெரிகிறது.

திருமணம் ஆனபிறகு கண்ணகி தன் பெற்றோர் வீட்டிற்கே போகவில்லை என்பதும் கோவலன் மாதவிபால் பிரிந்த பிறகும்கூடத் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விடக் கருதாமையும் நோக்கத் தக்கது. எனவே இருவரும் தத்தம் குடும்பப் பெயர்களைக் காப்பாற்றுவதில் கருத்துடன் இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

குன்றாக் கொள்கையாகக் கோவலனிடம் இருந்த கொள்கை யாது? தன் குடும்பப் பெருமையைக் காப்பது என்ற ஒன்றுதான் அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது. எந்தச் சூழலிலும் கோவலன் தன்னை யார் என்று வெளிக்காட்டிக் கொள்ளாமைக்கும் குடிப்பெயர் வெளிப்படக் கூடாது என்பதே காரணம். அவனுடைய பங்காகச் சிலப்பதிகாரத்தில் கோவலன் பேசும் இடங்கள் புகார்க் காண்டத்தில் ஏழு, மதுரைக் காண்டத்தில் ஆறு மட்டுமே. அவற்றில் அவனுடைய நுண்மாண் நுழைபுலம் நன்கு விளங்குகிறது.

மனையறம்படுத்த காதையில்தான் கோவலனின் கன்னிப்பேச்சு காணப்படுகிறது. கண்ணகியுடன் திருமணம் முடிந்த பிறகு, இருவரும் மனையறத்திற்குத் தொடக்கமாகத் தனித்து மகிழ்வதை மனையறம்படுத்த காதை பேசுகின்றது. பதினெட்டாண்டு இளைஞன் கோவலனும் பன்னிரெண்டாண்டுக் கண்ணகியும் தென்றல்வீசும் மேல் மாடத்தில் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வேண்டியவர்கள், காதல் உணர்வு தீராமல் கையற்றுப் போனதால், கோவலன் மட்டுமே தன் கையற்ற தீராக் காதலைப் போக்கிக்கொள்ளக் கண்ணகியிடம் குறியாக் கட்டுரையும் உலவாக் கட்டுரையும் பேசி முடிக்கின்றான்.

தொல்காப்பியம் கூறுவதுபோல் சொல் எதிர் பெறான் சொல்லி இன்புறல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே என்ற இலக்கணப்படி, கூட்டம் (பால் உறவு) நிகழாத வருத்தத்தைப் போக்கிக்கொள்ள பொருளற்ற பல காதல் பேச்சுக்களைக் கோவலன் பேசியதாகவே குறியாக் கட்டுரை என்றும் உலவாக் கட்டுரை என்றும் அடிகள் குறிப்பிடுவார். இங்குதான் கோவலனின் நீண்ட பேச்சுக் காணப்படுகிறது.

அதாவது 42 அடிகள் பேசுகின்றான். இங்கும் அவனுடைய புலமை நயம், தன் மனத்தே பொதிந்திருந்த காதல் உணர்வு, காதல் தணியாததால் அவன் வெளிப்படுத்திய செய்திகள்வழி, கோவலனின் இயற்கை அறிவு நமக்குத் தெரிகிறது. ஒருவேளை இருவரும் கூடியிருந்தால் இருவருக்கும் உடற்சோர்வு ஏற்பட்டு உறங்கி இருக்கலாம். அதற்கு முயன்றும் முயக்கம் இருந்தும் அது நிகழவில்லை என்பதை மிக நாகரிகமாகவே அடிகள் காதல் கையற்றுப் போய்விட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

குழவித் திங்கள் இமையவர் ஏத்த- என்று தொடங்கிக் கோவலன் வருணிப்பது முற்றிலும் இட்டுக்கட்டி இடம் நோக்கிக் கூறிய சொற்கள்தாம் என்பதை அடிகள் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் கண்ணகியின் தோற்றத்தினையோ, அவள் மாற்றத்தினையோ அடிகள் சிறு குறிப்பினால் அவள் புன்னகைத்தாள், மகிழ்ந்தாள் என்றுகூடக் குறிப்பிடாமையும் இருவருக்கும் உடலுறவு நிகழவில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது. மேலும் காப்பியத்தில் எந்த இடத்திலும் இருவரும் தம் இன்ப நிகழ்வினை, நினைத்ததாகவும் சுட்டப்பெறவில்லை என்பதும் இருவருக்கும் உடலுறவு நிகழாமையை உறுதி செய்கிறது.

அடுத்துக் கோவலனின் பேச்சாக வருவது கானல்வரிப் பாடல்கள். இவை அனைத்தும் முழுக்க முழுக்கப் புனைந்துரைக்கப் பெற்ற பாடல்கள். இவை கூறும் பொருட்கள் காப்பியக் கதை பற்றி வருவன அல்ல, என்றாலும் மாதவியும்- கோவலனும் தத்தம் தனித்தன்மையைக் காட்டவே, குறிப்புப் பொருளை மறைத்து வைத்துப் பாடியதாகக் கவிஞர் கூறுவார்.

இங்குக் கோவலன் மாதவியைப் பிரிவது என்ற முடிவோடுதான் இந்தப் பாடல்களைப் பாடினான். மாதவி பரத்தை என்ற எண்ணம் ஏதோ அவனுக்கு வந்ததுபோல், வேறொருவன் மேல் மனம் வைத்துப் பாடியதாகத் -தனக்குத் தானே கற்பித்துக் கொண்டு பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழும் என்று கூறிவிட்டுத் தான் மட்டும் எழுந்து கண்ணகியை நாடிச் சென்று விடுகிறான். கானல்வரிப் பாடல்களை ஒதுக்கிவிட்டுக் கதையோடு தொடர்புடைய இந்த வரி சிந்தனைக்குரியது.

மனையறம்படுத்த காதையின் இறுதியில் அடிகள் கோவலன் கண்ணகி வாழ்க்கை பற்றிக் கூறும்போது, கண்ணகிக்கு மண வாழ்க்கை யாண்டு சில கழிந்தன என்று கழிந்தது என்ற தொடரையே கானல்வரி இறுதியிலும் பொழுது ஈங்கு கழிந்தது என்று குறிப்பிடுவதால், பிரிவு நிகழப் போவதை நமக்கு அறிவுறுத்துகிறார்.

ஆனால் இந்தப் பிரிவு, வாழ்க்கையில் முழுப் பிரிவாகவே அமைந்து விடுகிறது. மாதவியோடு வாழ்ந்த பல ஆண்டுகளிலும்கூடக் கோவலன் தன் மனைவி கண்ணகியைப் பற்றிப் பேசாமையும், தன் மாசாத்துவான் குடும்பப் பெருமையைக் கூறாமையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தனக்கும் மாதவிக்கும் பிறந்த குழந்தைக்குப் பெயரிடும்போது தம் குடும்பத்தைக் காப்பாற்றிய கடல் தெய்வத்தின் பெயரையே மணிமேகலை என்று பெயரிடுகின்றான்.

மாதவி, மணிமேகலையைத் தன் மகள் என்று கூறாமல் கண்ணகி மகள் மணிமேகலை என்று மணிமேகலைக் காப்பியத்தில் கூறுவதும் குறிப்பிடத் தக்கது. எல்லோர்க்கும் கோவலனைப் பற்றியும் கண்ணகியைப் பற்றியும் தெரிந்திருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளாமை வியப்பிற்குரியது.

மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் வந்த கோவலன் தனிமையில் அவளிடம், தான் செல்வம் அனைத்தையும் தொலைத்துவிட்டேன். என் வறுமை நாணத் தக்கது என்று கூறுமிடத்தும் தன் குடும்பப் பெருமையைக் கூறவில்லை.

யாவும் சலம்புணர் கொள்கை சலதியோடு ஆடி
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும்

என்று வருந்திய கணவனுக்குக் கண்ணகி நலங்கேள் முறுவலொடு தன் விலை மதிப்புமிக்க சிலம்புகளைக் கொடுக்கின்றாள். கோவலன், இனி புகாரில் வாழ்ந்தால் தன் பெற்றோருக்குப் பெருமையாக இருக்காது என்று கருதி, இரவோடு இரவாகத் தன் மனைவி கண்ணகியையும் அழைத்துக் கொண்டு பொருள்தேட மதுரைக்குப் புறப்படுகின்றான்.

தன் பெற்றோருக்கும் சொல்லாமல் விடியும் முன்பாகவே மதுரைக்குப் போவதன் நோக்கமே, ஊரில் பிறர் ஏதும் அறியாமல் போக வேண்டும் என்பதும், தங்கள் குலப்பெருமை கெட்டுவிடக் கூடாது என்பதுமே காரணம்.

அடுத்து நாடுகாண் காதையுள் 3 இடங்களில் கோவலன் பேசியதாக உள்ளது. புகாரைவிட்டு ஊரின் எல்லைக்கு வந்தபோது, கண்ணகி மதுரை மூதூர் யாது? என வினவ, கோவலன் சிரித்தக் கொண்டு ஆறைங்காதம் உள்ளது என்று மறுமொழி கூறினான் என்ற ஒன்றுதான் நகைச்சுவைப் பகுதியாகச் சிலப்பதிகாரத்தில் உள்ளது.

வழியில் சமணத்துறவி கவுந்தியடிகளைச் சந்திக்கிறார்கள். அவரோ இவர்களைப் பார்த்து, உயர்ந்த குடி மக்களைப் போல் உள்ள நீங்கள் இவ்வாறு நடந்து வந்ததற்குக் காரணம் என்ன? என்று வினவ, கோவலன் தன் குலப்பெருமைகளை எல்லாம் கூற விரும்பவில்லை.

ஒரே வரியில் உரையாட்டு இங்கு இல்லை, உறு தவத்தீர் யான் மதுரை மூதூர்வரை பொருள் வேட்கையேன் என்று மட்டும் கூறுகின்றான். துறவி கவுந்தியடிகளும் தானும் மதுரைக்குப் போக வேண்டியுள்ளது, உடன் வருகின்றேன் என்று கூற, கோவலன் மகிழ்ந்தான்.

இவர்கள் செல்லும் வழியில் வம்பப் பரத்தர் இருவர் கவுந்தியடிகளிடம், அவருடன் வரும் இருவரும் யார்? என்று வினவ, அடிகள் தம் மக்கள் என்று மறுமொழி கூறினார். அதனைக் கேட்ட பரத்தர், உடன் பிறந்தவர்கள் கணவன்-  மனைவியாக வாழ்தல் உண்டோ? என்று சொல்ல, அடிகள் சினமுற்று அந்த இரு பரத்தர்ளையும் நரியாகச் சபித்துவிட்டார். அதனைக் கண்ணுற்ற கோவலன்  -கண்ணகி இருவரும், அறியாத மக்களைத் தண்டிப்பது முறையல்ல என்று அவர்கட்குச் சாப விடுதி பெறுகின்றனர்.

இந்த அளவில் புகார்க் காண்டத்துள் கோவலன் உரையாடல்கள் ஆறு இடங்களில் முடிகின்றது.

அடுத்து, மதுரைக் காண்டத்துள் பன்னிரெண்டு இடங்களில் கோவலன் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் மதுரையை நோக்கிக் கால்நடையாகவே வருகின்றனர். வழியில் வந்த மறையவன் ஒருவனிடம் கோவலன் மதுரைக்குரிய நல்ல வழியினை கோசிகமணி என்ற அந்தணனிடம் கேட்பதிலிருந்து அவனுக்கும் மதுரைக்குரிய வழி தெரியாமல் புகார் நகரத்திலேயே வாழந்திருக்கின்றான் என்பதும் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் என்று அடிகளால் கண்ணகி சிறப்பிப்பதாலும், முற்றுந் துறந்த துறவி கவுந்திக்கும்கூட மதுரைக்குரிய வழி தெரியவில்லை என்பதும் தெரிகிறது.

அவன் வழிதான் மாதவியின் நிலை பற்றி நாமும் அறிகிறோம். இங்குத்தான் மாதவியின் அறிவுச் சிறப்பு, பண்பாட்டுச் சிறப்பு முதலியவற்றை அறிய முடிகிறது. கோவலன் இரவோடு இரவாகக் கண்ணகியுடன் மதுரைக்குப் போகிறான் என்ற செய்தியை அவனுடைய பெற்றோர்கள் அறியாமல் ஊரெல்லாம் தேடுவதாக அடிகள் கூறுகிறார்.

ஆனால் மாதவிக்கு மட்டும் எப்படியோ இவர்கள் மதுரைப் பயணம் தெரிந்திருப்பதும் கோசிகமணி என்ற அந்தணன் வழி ஒரு முடங்கலைக் கொடுத்தனுப்பக் கூடிய அறிவுத்திறம் வியக்கத் தக்கதாக உள்ளது. வழிநடை வருத்தத்தால் கோவலனின் உடல் கருத்துப் போனதாலும், வாடி இருந்ததாலும் கோசிகமணி தெளிவாகக் கோவலன்தானா? என்று அறிய மாதவி என்று கூறப்படும் குருக்கத்திச் செடியைப் பார்த்து, கோவலனைப் பிரிந்த புகாரைப் போல நீயும் வாடியிருக்காயோ? என்று கூற, இதனைக் கேட்ட கோவலன் அவனிடம் யாது நீ கூறிய உரை ஈது இங்கு? என்று கேட்டவுடன் தீதிலன் கண்டேன் என்று அந்தணன் கூறுவதை ஆராய்ந்தால், கோவலன் மாதவியைப் பிரிந்தமையால் வாழ்விழந்துவிட்டான் என்ற ஐயம் ஏற்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

பின்னர் அவனுக்கு மாதவி அனுப்பிய மடலைக் கொடுக்க, கோவலன் உள்ளத்தில் உண்மையான மாற்றமும் மாதவியின் மாசில்லா அன்பும் அவனால் தெளியப்படுகிறது. இக்கடிதத்தின் உள்ளுறையாக நமக்குத் தெரிவது, ஏனையோரைவிடக் கோவலனை நன்கு அறிந்தவள் கண்ணகி அல்லள், மாதவியே என்பதும் புலனாகின்றது.

கோவலன் தன் பெற்றோரிடம் எத்துணை மதிப்பு வைத்திருந்தான் என்பதும், கண்ணகிதான் கோவலனின் குலப்பிறப்பாட்டி என்ற உரிமையுடையவள் என்பதும், கோவலன் இரவில் புறப்பட்டு மதுரைக்குப் போவதற்குத் தான் என்ன தவறு இழைத்தேன் என்று வினவுவதும் நம் நெஞ்சைத் தொடுகிறது. கோவலனுக்கும் இக்கடிதம் நெஞ்சைத் தொட்டதால் இந்தக் கடிதக் கருத்துத் தம் பெற்றோருக்கும் பொருந்துவதால், அதனைத் தம் பெற்றோரிடம் சேர்க்குமாறு அந்தணனிடம் கூறுகின்றான்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டுவது, சிலப்பதிகாரம் முழுவதிலும் மாதவி கோவலனுடைய பெற்றோரைப் பற்றியும், கண்ணகியைப் பற்றியும் அறிந்திருந்தும் அதனை வெளிப்படுத்தாத பெருந்தன்மை வெளிப்படுகின்றது. அதேபோல் கண்ணகியும் மாதவிபால் கோவலன் இருந்தும் அதனை யாரிடமும் மாமன்,- மாமியிடமோ தன் தோழி வயந்தமாலையிடமோ கூடச் சொல்லாமை பெருமைக்குரியது.

ஊர்காண் காதையில் புறஞ்சேரியில் நான்மறை முற்றிய மாடலன் கோவலனின் சிறப்புக்களை எல்லாம் கூறியவன், கோவலனின் பெற்றோர் பற்றியும், கண்ணகி பற்றியும் தெரிந்திருந்தால் சொல்லி இருப்பான். கோவலன் கவுந்தியடிகளிடம் தன் மனைவி கண்ணகியைப் பாதுகாப்பினளாக விட்டுவிட்டுத் தன் உறவினரை மதுரையில் பார்த்து வருவதாகக் கூறும்போதுதான் கண்ணகி நல்லாளை, நறுமலர் மேனியாளை நடுங்குமாறு துயரப்படுத்தி காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நடந்து அழைத்து வந்த சிறுமை உற்றேன் என்று கூறும்போது தன் குடும்பப் பெருமையை, மாசாத்துவன் மகன் என்பதைச் சொல்லாமையும் தன் குடும்பப் பெயரைக் கோவலன் கெடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது.

மதுரைக்குச் சென்றவன் கலைஞன் என்பதால், மதுரையைச் சுற்றிப் பார்த்து அழகைக் கண்டு மகிழ்ந்தவனாகத் திரும்புகின்றான். அவன் நோக்கம் உறவினர்களைப் பார்ப்பதே இல்லை. போனால் தன்னுடைய பெற்றோரைப் பற்றிச் சொல்ல வேண்டி வரும்.

அவனுடைய சிலம்பு விற்கும் செய்தி பெருமையைத் தராது என்பதால், முற்றிலுமாக உறவினரைத் தேடவில்லை என்பதே உண்மை. மதுரையைப் பார்த்து வந்த செய்தியைக் கவுந்தியிடம் கூறிய பின்னர் கண்ணகியை மாதரியிடம் கவுந்தி அடைக்கலப்படுத்துகிறார். கவுந்தியடிகளிடம் இரவு தான் கண்ட கனவைப் பற்றிக் கூறி, அதனால் ஏதேனும் தீங்குக் கண்ணகிக்கு விளையுமோ? என்றும் கேட்கிறான். கவுந்தியடிகள் மறுமொழி ஒன்றும் கூறாமல் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப் படுத்துகிறார்.

கொலைக்களக் காதையில் கண்ணகியின் மனையறம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. கோவலனைக் கண்ணகி அமுதுண்ண அடிகளை வருக எனத் தானே சமைத்த உணவைப் பரிமாறி, அவனுக்கு அடைக்காயும் கொடுக்க, அவன் அவளைத் தழுவிக்கொள்கின்றான்.

இங்குதான் கோவலன் கண்ணகியிடம் தன்னுடைய தவறுகளை எல்லாம் சொல்லி அவளைத் தேற்றுகின்றான். சிலப்பதிகார நூலுள் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி இதுவேயாகும். எழுகென எழுந்தாய் என் செய்தனை? என்று கோவலன் தன் செய்கைக்கு வினையைத்தான் காரணம் காட்டுகின்றான். பின்னர் கண்ணகியிடம் பெற்றுவந்த அவளது சிலம்பை, நகைக் கடைக்கு விற்கச் செல்லாமல், பொற்கொல்லனிடம் காட்டி, அவனிடம் சிலம்பினை நீ விலையிடுதற்கு ஆதியோ? என்று கேட்டு, பொற்கொல்லன் சூழ்ச்சியால் வெட்டப்படுகிறான்.

இறுதியாகக் கோவலன் பேசியதுபோல் ஒரு வரி சுட்டப்படுகிறது. கோவலன் வெட்டப்பட்டுக் கிடந்த இடத்திற்குக் கண்ணகி வந்து, அவனைத் தொட்டுத் தூக்கும்போது, கோவலன் கண்ணகியிடம் எழுது எழில்மலர் உண்கண் இருந்தைக்க என்று கூறியதாக அடிகள் குறிப்பிடுவதோடு கோவலனின் பதினெட்டு உரைக் கூறுகளும் நிறைவடைகின்றன.

இக்கட்டுரையின் வழி நாம் அறிவது குன்றாக் கொள்கைக் கோவலன் தான் பிறந்த மாசாத்துவான் குடும்பத்திற்கு எந்தச் சூழ்நிலையிலும் கேடு வராதவாறு, தன்னை வெட்ட வந்த காலத்தும் தான் யாருடைய மகன் என்றுகூடக் கூறாது தன்னையே இழப்பதன் வழி தன்னுடைய மாசாத்துவான் குடும்பப் பெயரைக் காப்பாற்றிய கொள்கைதான் குன்றாக் கொள்கை.

ராசி பலன்கள்

இம்மாத ராசிபலன்

ஜோதிடத் திலகம் க. தில்லையம்பலம்

நல்லதைச் சொல்வது ஆன்மிகம் உள்ளதைச் சொல்வது ஜோதிடம் மேஷம் மேஷ ராசி நேயர்களுக்கு மாதத்தின் முற்பாதி சூரியனின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால், தொழில் உத மேலும்

ஆன்மிகங்கள்

காண்போரைக் கவரும் காளையார் கோவில்

என்.ஆர். ஜெயசந்திரன்

சிவகங்கை மாவட்டத் தலைநகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள கானப்பேர் என்று அழைக்கப்பட்ட காளையார் கோவில் அமைந்துள்ளது. அவ்வூர் கி.பி. முதலாம் நூற்றாண் மேலும்
Powered By Indic IME