வியாழன் ,டிசம்பர்,18, 2014

இளங்கோவடிகளை பாரதி இப்படிச் சிந்தித்திருப்பாரோ!

சிபி

இளங்கோவடிகளின் படைப்பாகிய சிலப்பதிகாரம் அவருடைய கற்பனைப் படைப்பு அல்ல. நடந்த ஒரு சோகச் சம்பவத்தை இளங்கோவின் சமகாலப் படைப்பாளியான சாத்தனார் எடுத்துச் சொல்லியதன் தாக்கத்தினால் எழுதப்பட்டதுதான் சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரத்தின் நோக்கம் முப்பெரும் உண்மைகளைச் சொல்லவந்த படைப்பு என்பதே பண்டிதர்கள் பலரின் முடிபாகும்.

இம்முப்பெரும் உண்மைகளுக்கு அப்பாலும் இவற்றுக்குச் சமமான வேறுசில பேருண்மைகளும் இல்லாமல் இல்லை.

உதாரணமாக, வாழ்க்கை தொண்டு மயமானது எனக்கூறிய 63 நாயன்மார்கள் சித்தரித்துள்ள தொண்டும் ஒரு பேருண்மைதான்.
அவதாரப் புருஷர்களை எளிவந்தவர்கள் என்பதால், எளிமையும் ஒரு பேருண்மையாகப் போற்றப்படுகிறது.

உழைப்பு என்ன சாதாரண உண்மையா? உழைப்பில்லாமல் இந்த உலகமே இல்லையே!

இப்படிப்பட்ட வாழ்வியல் பேருண்மைகள் எத்தனையோ உண்டு. சிலப்பதிகாரம் பாட்டுடைச் செய்யுளாக நாட்டுகிற முப்பெரும் உண்மைகளான,

“அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”

என்பன பற்றி உரக்கச் சிந்திப்பது கூட சிலப்பதிகாரத்திற்குச் சிறப்புச் சேர்க்கவே உதவும்.

பேருண்மையை வடமொழியில் சத்தியம் என்பார்கள். சத்தியம் என்பது மாறாதது என்பார்கள். எது மாறாததோ அதுதான் சத்தியம்.

ஒரு தத்துவ மேதை சொன்னார்: மாறிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எது நிரந்தரமானது என்றால், அந்த மாற்றம்தான் நிரந்தரமானது (Change is Permanent).

இதுவும் ஒரு பேருண்மைதான். சிலப்பதிகாரம் பேசும் மூன்று பேருண்மைகளுக்குள் நமது மொத்த வாழ்க்கையும் அடங்கி விடாது என்பதே சிலப்பதிகாரம் பற்றிய ஒரு சரியான புரிதலாகும்.

இந்தப் புரிதலோடு இளங்கோவடிகள் கண்ட – காட்டிய – நாட்டிய அம்மூன்று பேருண்மைகளையும் அணுகுவதும், அலசுவதும் அவசியப்படுகிறது.

ஏனெனில், சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற பாண்டியன் நெடுஞ்செழியன் மனச்சாட்சியுள்ள மன்னனாக ஆட்சி செய்திருக்கிறான்.

அவன் செய்த பிழை, நிரபராதியைக் குற்றவாளியாகக் கருதி மரண தண்டனை வழங்கியதுதான்.

நடைமுறையில் இப்பேருண்மையைக் கையாள வேண்டுமானால், அரசியல் துறையிலுள்ள அனைவருக்கும் இதனைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அந்தப் பொருத்தப்பாட்டைச் செய்து பார்த்தால், இந்திய அரசியலில் மனச்சாட்சியுள்ளவராக நமக்கு காந்தியடிகள் ஒருவர் மட்டும்தான் மிஞ்சுகிறார்.

அநேகமாக அனைத்து அரசியல்வாதிகளும் பல்வேறு அரசியல் பிழைகளை அனுதினமும் செய்பவர்களாகவே உள்ளனர். அவர்களிடத்தில் காணப்படும் மாபெரும் குறைபாடே, அவர்களின் பிழைகளைவிட அவர்களுக்கு மனச்சாட்சி இல்லை என்பதுதான்.

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பதில் உள்ள இந்த அறம் எதைச் சுட்டுகிறது? சிலப்பதிகாரம் சம்பந்தப்பட்ட அளவில், அது பாண்டிய மன்னனுடைய மனச்சாட்சியைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

தனக்குத் தெரியாமல் தவறு செய்துவிட்ட மன்னன் அவன். தவறு செய்ததைத் தெரிந்து கொண்ட பிறகு, தனக்குத்தானே தண்டனையும் கொடுத்துக் கொள்கிறான்.

பெரிதாக இளங்கோவடிகளால் போற்றப்படுகிற இந்த முப்பெரும் உண்மைகள் சிலப்பதிகாரச் செவ்வகத்திற்குள் மட்டுமே செயல்பட்டவையே தவிர, அதைத்தாண்டி வெளியிலும் வந்து அது செயல்படுகிறதா என்று எழுப்பப்படும் கேள்வி சிலப்பதிகாரத்துக்குக் கேடு செய்துவிடாது.

மனச்சாட்சி மக்களிடம் செயல்படாது போய்விட்டதென்றால், அதனால் ஏற்படும் இழிவு, இளங்கோவடிகளுக்கு அல்ல. இங்குள்ள சக மனிதர் அனைவருக்கும்தான்.

காவல்துறை கண்காணிப்பதனால்தான் இவன் ஒழுங்காக இருக்கிறானே தவிர, சந்தர்ப்பம் கிடைத்தால் இவனும் சறுக்கி விழுந்து விடுவான் என்பது மனச்சாட்சியின் மகத்துவத்துக்குச் செய்யப்படும் மாபெரும் அவமானமாகும்.

ஆகவே, பயன்பாட்டுப் பார்வையில் பரிசீலித்தால், சிலப்பதிகாரம் பேசுகிற முதல் பேருண்மை செப்பனிடவே முடியாத அளவிற்குச் சேதத்திற்கு உள்ளாகிறது. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்ற இரண்டாவது பேருண்மையும் இதுபோலவே சிந்திக்க வைக்கிறது.

சிலப்பதிகாரத்தில் நாம் சந்திக்கிற பாத்திரங்களில் கண்ணகி ஒருத்தி மட்டும்தான் கற்புள்ளவளா? பிரபலமில்லாத பாத்திரங்களாகிய தேவந்தி என்ன கற்பு நெறி இல்லாதவளா? வயந்தமாலைக்குக் கற்பு இல்லையா?
இடைச்சேரியிலே கண்ணகி தங்கியிருந்த மாதரி குடும்பத்து மகளிர்களுக்குக் கற்பு இல்லையா? அவ்வளவு ஏன்? கோவலனின் கொலைக்குக் காரணமான பொற்கொல்லனின் மனைவி கூட இந்தக் கற்புநெறிப் பட்டியலில் இடம்பெறத் தக்கவள்தானே!

சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மகளிரையும் கற்புள்ளவர்களாகக் கருதுவதுதானே நயத்தக்க நாகரிகம்.

இங்கிலாந்து இளவரசி டயானாவின் கணவர் பிலிப்ஸ் திருமணத்திற்கு முன்பே கமிலா பார்க்கர் என்ற தன்னைவிட மூத்த பெண்ணோடு வாழ்ந்த வாழ்வை ஒரு புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தைப் படித்த டயானா அதிர்ச்சிக்கு உள்ளானார். நம்பிக்கை சிதறிய நிலையில் தன்னைத் தானே சித்ரவதை செய்து கொண்டார்.

பி.பி.சி. டயானாவைப் பேட்டி கண்டது. அதில் அவர் பேசியபோது, மனைவிக்கும் கணவனுக்கும் மத்தியில் மூன்றாம் நபர் பிரவேசிப்பாரானால், மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டுவிடும் என்றார். (“Between husband and wife if a third person comes, it would be too crowded”|.

இந்தக் கருத்தில் தொனிப்பது எது? டயானா தான்மட்டுமல்ல, தனது கணவனும் கற்புடையவனாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கைதானே. ஐரோப்பிய நாகரிகத்தில்கூட கற்புக்குக் கவனிக்கத்தக்க இடமிருக்கிறது.

கண்ணகியுடைய கற்புக்குத் தேக ரீதியாக எவ்வித ஆபத்தும் ஏற்படவே இல்லை. கணவன் இருந்தும் அவனை இழந்தவளாகிவிட்ட, இளம் பெண் கண்ணகி பட்ட துயரம் கவலைக்குரியதே தவிர, கண்ணகியின் கற்புக்கும் அத்துயரத்துக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்க வேண்டியுள்ளது.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல் என்ற வரியைப் படித்து விட்டு, சராசரிகளைப் போல் அல்லாமல் மகாகவி பாரதி வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார்.

அந்தச் சிந்தனை இளங்கோவடிகளின் மீது செய்யப்பட்ட விமர்சனமாகக்கூட இருக்கலாம்.

கற்புடைய பெண்டிரை உயர்ந்தவர்கள் பாராட்டுவார்கள் என்று இளங்கோவடிகள் சொல்லி வரும்போதே, பாரதி ஏதோ குறுக்கீடு செய்தது போல,

கற்பு நிலை என்று பேசவந்தார் – இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்கிறார்.

இளங்கோவடிகளே சிந்திக்காத ஆண் கற்பு பற்றிய பாரதியின் சிந்தனை தர்க்க ரீதியானது. ஆடவன் ஒருவன் கற்புள்ளவனாக இருந்தால்தான் பெண்ணும் கற்புள்ளவளாக வாழ முடியும். ஆடவன் சபலமானவனாக இருந்தால், அவனால் அல்லது அதனால் யாரோ ஒருத்தி கற்பிழந்து விடுகிறாளென்றுதானே பொருள்?

ஆண்கள் கற்பு இல்லாதவர்களாக நீடிக்கும் வரை, பெண்கள் கற்புள்ளவர்களாக இருப்பது சாத்தியமாகாது என்பது ஒரு தர்க்க ரீதியான முடிவாகும். இளங்கோவடிகள் காட்டும் கற்புநெறி கண்ணகிக்கு மட்டுமே எனக் குறுக்கி விடுவதா? அல்லது சமுதாயம் முழுவதற்குமே உரியது என விரிவாக்குவதா எனக் கேட்க வேண்டியிருக்கிறது.

கம்பன் காட்டிய ராமன், ஏகபத்தினி விரதனாக இருந்தான். கற்புள்ள ஆடவனாக அவன் இருந்த காரணத்தால்தான் சீதையின் சொற்களுக்கே சுடுகிற ஆற்றல் வாய்த்தது என்கிறார் கம்பர்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது மூன்றாவது பேருண்மை. முந்தைய ஜென்மத்தில் பாவங்கள் செய்திருப்பானேயானால், அந்தப் பாவங்கள் அந்த வினைக்கு உரியவனைச் சென்று பழி வாங்கியே தீரும் என்பதே வினைக்கோட்பாடு.

இந்தப் பேருண்மையை நமது நடைமுறை வாழ்க்கையில் எப்படி உணர்வது?

உணர்ந்தால்தானே, அது ஊட்டுகிற அச்சத்தால் மனிதர்கள் தவறு செய்யாமல் தடுக்கப் படுவார்கள்.

கிடைக்கிற புள்ளி விபரத் தகவல்களின்படி பார்த்தால், கொடூரக் குற்றங்களுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதனாலேயே சமூகத்தில் குற்றங்கள் குறையவில்லை என்கிறார்கள்.

அதனால், தூக்குத் தண்டனையை 69 நாடுகள் ரத்து செய்து விட்டன. சில நாடுகளில்தான் தூக்குத் தண்டனை இன்னும் நீடிக்கிறது.

இளங்கோவடிகளின் மூன்றாவது பேருண்மையில் இருண்டு கிடக்கும் முக்கியமான அம்சம், ஊழ் என்றால் என்ன? என்பதுதான். அந்த ஊழ் ஏதோ தானியங்கி ஏவுகணை போலப் புறப்பட்டுப் போய்த் தவறு செய்பவனைத் தண்டித்து விடும் என்று மக்கள் அதற்கு அஞ்சுகிறார்களா?
ஊழ் பற்றி விமர்சித்தால் சிக்கல் மேலும் அதிகமாகிறது. ஏனெனில் 700 கோடி உலக மக்களில் 100 கோடி கிறித்தவர்களுக்கு ஊழ் மீது நம்பிக்கை இல்லை. 120 கோடி இஸ்லாமியர்களுக்கும் ஊழ் பற்றித் தெரியாது. மறுபிறவியை மறுப்பவர்கள் அவர்கள்.

மேலும் 120 கோடி பௌத்தர்களுக்கும் இதைப் பற்றிய சிந்தனையில்லை. இதேபோல்தான் சீக்கியர்களும், பார்சிகளும், இஸ்ரேலியர்களும் இருக்கிறார்கள்.

ஊழ் என்பது சமண சமயக் கோட்பாடாக இருந்து சைவத்திலும், வைணவத்திலும் அது பிரவேசித்துள்ளது.

ஊழ் பற்றித் தெரிந்தோ, தெரியாமலேயோ இருக்கிற இந்துக்களுக்கு இது பற்றிய புரிதலும் போதுமானதாக இல்லை. அதனால், இளங்கோவடிகளின் மூன்றாவது பேருண்மையான ஊழ் என்பதை உலக மக்கள் அனைவரும் உபயோகிப்பதாகத் தெரியவில்லை.

ஊழ் என்பதை மனித குலம் முழுவதுமே உண்மையென நம்பி, விநாடிப் பொழுதுகூட அதற்கு விடுமுறை கொடுக்காமல் கடைப்பிடிக்குமானால், நமக்குக் காவல்துறை தேவையில்லை. நீதிமன்றம் அவசியமில்லை. கைரேகை நிபுணர்களோ, சி.ஐ.டி.களோ எதற்காக?

ஊழ் என்பதே இல்லையென்று சாதிப்பதால் ஏற்படும் நஷ்டம் இளங்கோவடிகளுக்கு அல்ல, நமக்குத்தான்.

இம்மூன்று பேருண்மைகளையும் நவீன சிந்தனைத் தராசில் வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால், மூன்றுமே எடையிழந்து போகின்றன.

ஆனாலும் சிலப்பதிகாரக் கதை அமைப்பிலும் வண்ணமயமான வருணனை களிலும், பாத்திரப் படைப்புகளிலும், பின்புலத்துச் சொல்லோவியமாகத் தீட்டியதிலும், இயற்கைச் சித்தரிப்புகளிலும் தமிழ் அமுதம் தளும்பி வழிகிறது.

திங்களைப் போற்றுதும் என்ற சிலப்பதிகார முதல் வரியே உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்ற சேக்கிழாரின் செந்தமிழ் வரியை விஞ்சுகிறது.

சிலப்பதிகாரத்தில் காணப்படும் நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால், போற்றா ஒழுக்கம் புரிந்தீர், கரும்பே தேனே, மாலை வாராராயினும் காலை காண்குவம், நடந்தாய் வாழி காவேரி முதலிய சிரஞ்சீவித்துவமான கவிதை வரிகள், வாசகர் மனதை வசீகரித்து விடுகின்றன. அவற்றைத்தான் பாரதி ரசித்துத் தனது நெஞ்சை அள்ளும் வரிகள் என்கிறார். இவற்றை எல்லாம் தன்மயப் படுத்திக்கொண்டு பூரித்த காரணத்தால்தான் மகாகவி பாரதி நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்றார்.

சிலம்பு என்பது மகளிரின் கால்களுக்குரிய அணிகலன்தான். பாரதியோ அதனைத் தமிழ்த்தாயின் கழுத்தில் மணி ஆரமாகவே சூட்டுகிறார்.

இது மட்டுமல்ல, சிலப்பதிகாரம் என்ற ஒட்டுமொத்தப் படைப்பை மணியாரம் என்று போற்றிய பாரதி அதோடு நிற்கவில்லை.

யாமறிந்த புலவரிலே, கம்பனைப் போல், வள்ளுவர்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று கூறி இளங்கோவடிகளுக்குப் புகழாரமே சூட்டியுள்ளார்.

இவ்வாறு படைப்புக்கும், படைப்பாளிக்கும் பெருமை சேர்த்த பாரதி அந்தப் படைப்பு பிரகடனப் படுத்தியுள்ள அம்முப்பெரும் உண்மைகளைப் பற்றி எதுவும் கூறாமல் மௌனமாகி விட்டாரே ஏன்?

மௌனமாகியது மட்டுமல்ல. இளங்கோவடிகளின் கொள்கைப் பிரகடனத்திற்கு எதிராக ஆடவரின் கற்பைப் பற்றி அழுத்தமாகவே பேசும் வகையில் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்கிறார்.

ஊழ் பற்றி அவர் எந்தக் கவிதையிலும் தமது உரத்த சிந்தனையை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை.

அரசியல் பற்றியும் அறம் எனும் கூற்றுவன் பற்றியும் பாரதியின் பார்வை இளங்கோவடிகளை ஒத்துக்கொள்கிற பார்வையாக இருந்தாலும், நடைமுறை வாழ்க்கையில் மனிதர்களில் வஞ்சனை செய்பவர்களாக உள்ளவர்களை அவர் இனம் காட்டியிருக்கிறார்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்பதை ஊழ் வலிக்கு எதிரான ஒரு புரட்சிக் கோஷமாகவே கருதலாம்.

இவ்வாறு இளங்கோவடிகளை பாரதி இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும், அவரை அங்குலம் அங்குலமாகக் கடந்து வந்து இளங்கோவடிகளின் இன்பத் தமிழைப் போற்றிப் போற்றிப் பாடுகிறார்.

ராசி பலன்கள்

2014 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

ஜோதிடத் திலகம் க. தில்லையம்பலம்

2.11.2014 - சனி - விருச்சிகம் 15.03.2015 - சனி - வக்ர ஆரம்பம் 2.08.2015 - சனி - வக்ர நிவர்த்தி 26.03.2016 - சனி - வக்ர ஆரம்பம் 13.08.2016 - சனி - வக்ர நிவர்த்தி 25.01.2017 - சனி - தனுசு 06.04.2017 - சனி - வக்ர ஆர மேலும்
Powered By Indic IME